கொல்கத்தா: அடுத்த மாதம் துவங்கவுள்ள டாடா ஸ்டீல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியன் குகேஷ் – 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் மோதவுள்ளனர். டாடா ஸ்டீல் செஸ் போட்டிகள், வரும் 2026, ஜனவரி 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளன. அப்போது, ஓபன், மகளிர் பிரிவுகளில், ரேபிட், பிளிட்ஸ் வடிவ செஸ் போட்டிகளில், முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் மோதவுள்ளனர்.
ஓபன் பிரிவில், ஃபிடே உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் 2ம் இடம் பிடித்த சீனா கிராண்ட் மாஸ்டர் வெ யி, அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் சாம்பியன் வெஸ்லி ஸோ, ஹான்ஸ் நீமான், வெலோடார் முர்ஸின், இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, அரவிந்த் சிதம்பரம், திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால், ரக்சித்தா ரவி மோதவுள்ளனர். இந்த பிரிவில் 6 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, தமிழகத்தை சேர்ந்த, 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் மோதவுள்ளார்.
அப்போது, நடப்பு சாம்பியன் குகேஷுடன் அவர் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனந்த் நடத்தி வரும் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் குகேஷ், ஆனந்தின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவர்கள் இடையிலான போட்டி, குரு-சீடன் இடையிலான போட்டியை போன்றதாகும். மகளிர் பிரிவு போட்டிகளில் உலக கோப்பை சாம்பியன் திவ்யா, அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, கேதரீனா லாக்னோ நானா ஸாக்நிட்ஸே, ஹரிகா உள்ளிட்டோர் மோதவுள்ளனர்.
