×

கோபியில் 30ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட பொதுக்கூட்டம் வைத்துள்ளதால் விஜய் கட்சியில் நாளை சேரும் செங்கோட்டையன்; ஓபிஎஸ் சசிகலா, டிடிவியை கைவிட்டு விட்டு பறக்கிறார்

சென்னை: கோபிசெட்டிபாளையத்தில் வருகிற 30ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டம் நடத்துவதால், அதற்கு போட்டியாக, நடிகர் விஜய் கட்சியில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நாளை இணைகிறார்.
ஜெயலலிதாவின் தேரோட்டி என்று அழைக்கப்பட்டவர் செங்கோட்டையன். இவர் தனக்கென்று பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்தை எப்போதும் வைத்தது கிடையாது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்ததால், ஆதரவாளர்களை சேர்த்தால் பதவி பறிபோய்விடும் என்று நினைத்து கட்சியினரை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் சசிகலாவுடன் மோதல் இருந்து வந்தது. செங்கோட்டையன் மகன் புகார் அளித்ததால், ஜெயலலிதா அவரது அமைச்சர் பதவியை பறித்தார். அன்று முதல் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். செங்கோட்டையனை ஓரங்கட்டுவதற்காக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலத்ைத அமைச்சராக்கினார். 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை வேண்டும் என்றே பெருந்துறையில் நடத்தினார் ஜெயலலிதா.

அந்த தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பல எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர். செங்கோட்டையனும் சென்று விடக்கூடாது என்பதற்காக அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் முட்டல், மோதல் இருந்து வந்தது. செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தில் கருப்பண்ணனை எடப்பாடி ஆதரித்தார். இதனால் மோதல் தீவிரமானது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு இந்த மோதல் தீவிரமானது. கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேற்றப்பட்டதும், அவர்களுடன் செங்கோட்டையன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டு வர, செங்கோட்டையனை பாஜ கையில் எடுத்தது. அவர்கள் நினைத்ததுபோல எடப்பாடி பழனிச்சாமி, பாஜ கூட்டணியில் சேர்ந்தவுடன் செங்கோட்டையனை வழக்கம்போல, பாஜ கழற்றி விட்டது. பாஜவை நம்பி, எடப்பாடி பழனிசாமியை பகைத்துக் கொண்டு செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஆனால் இவர்கள் எல்லாம் ஆளுக்கொரு திசையில் செல்வதால், செங்கோட்டையனால் இணைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில், செங்கோட்டையனுடைய பெரும்பான்மையான ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்து விட்டனர். இதனால் வருகிற 30ம் தேதி செங்கோட்டையனுடைய சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில், 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி தொடங்குகிறார். இதற்காக சுமார் 50 ஆயிரம் பேர் வரை திரட்ட வேண்டும் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகளில் செங்கோட்டையனின் முன்னாள் ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். தன்னுடைய சொந்த ஊரில் எடப்பாடி பலம் காட்டுவதால், அதற்கு முன்னதாக தான் அதிரடியாக எதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஜய் கட்சியில் இணைய முடிவு செய்தார். இதற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து சென்னை வந்தார். நடிகர் விஜயை இன்று ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, விஜய் முன்னிலையில் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் நாளை அவர் கட்சியில் இணைகிறார். இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்து வருகிறார்.

* ஓ.பன்னீர்செல்வத்தை போட்டுக் கொடுத்த செங்க்ஸ்
செங்கோட்டையனைக் கண்டால் பல முன்னாள் அமைச்சர்கள் அலறுவார்கள். ஏனென்றால், தங்களிடம் நல்லபடியாக பேசிவிட்டு, அப்படியே ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாராம். முதல்வராக கலைஞர் இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது, பன்னீர்செல்வத்தை கலைஞர் சட்டப்பேரவையில் பாராட்டிப் பேசினார். இதற்கு அவர் நன்றி தெரிவித்தார். இதைப் பார்த்ததும், கலைஞருடன் பன்னீர்செல்வம் இணக்கமாக இருக்கிறார். அவரை கலைஞர் இன்று பாராட்டினார். அவரும் பதிலுக்கு நன்றி தெரிவித்தார் என்று சட்டப்பேரவை கூட்டம் முடிவதற்குள் ஜெயலலிதாவிடம் செங்கோட்டையன் போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் ஜெயலலிதா, கூட்டம் முடிந்து வெளியில் வந்த பன்னீர்செல்வம், வீட்டுக்கு செல்வதற்குள் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்து உத்தரவிட்டார். இதனால் அப்போது முதல் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் ஒருவரை ஒருவர் ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்தே வந்தனர். ஆனால் இப்போது இருவரும் அரசியலில் ஓரங்கட்டப்பட்டதால், ஒன்று சேர்ந்தனர். தற்போது அவர்களும் பிரிந்துவிட்டனர்.

Tags : Sengottaiyan ,Vijay ,Edappadi Palaniswami ,Gopi ,Sasikala ,TTV ,Chennai ,Gopichettipalayam ,Jayalalithaa ,
× RELATED சொல்லிட்டாங்க…