×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக 15 சிறப்பு ரயில்கள் வரும் 3, 4ம் தேதிகளில் இயக்கப்படுகிறது சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து

திருவண்ணாமலை, நவ. 26: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் 29ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 30ம் தேதியும் நடக்கிறது. விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், எம்பி சி.என்.அண்ணாதுரையும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினர்.

அதன் எதிரொலியாக, 15 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு நடைகளும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 8 நடைகளும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு 6 நடைகளும், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு 4 நடைகளும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர, வழக்கமாக இயக்கப்படும் தினசரி ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல 3 மற்றும் 4ம் தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயில்கள் அனைத்தும், சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள் பயண நேர விபரம் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chennai ,Villupuram ,Nellai ,Tiruvannamalai Deepathi Diwali ,Tiruvannamalai ,Southern Railway ,Tiruvannamalai Karthigai Deepathi Diwali ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...