மும்பை: 20 அணிகள் மோதும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (நவம்பர் 25, 2025) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த 10வது பதிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி, பிப்ரவரி 7ஆம் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்வதன் மூலம் தனது கோப்பைப் பயணத்தைத் தொடங்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.பிப்ரவரி 7 முதல் 20 வரை 40 லீக் போட்டிகள் நடைபெறும்.
குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா (USA), நமீபியா, நெதர்லாந்து
குரூப் B:ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்
குரூப் C: இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இத்தாலி, நேபாளம்
குரூப் D: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
இந்தியா மற்றும் இலங்கையில் மொத்தம் எட்டு மைதானங்களில் (இந்தியா-5, இலங்கை-3) போட்டிகள் நடக்கின்றன. லீக் சுற்றுக்குப் பிறகு, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் எயிட்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
கொல்கத்தா/கொழும்பு மற்றும் மும்பையில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் அல்லது இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடத்தப்படும். மார்ச் 8ஆம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் / கொழும்புவில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், போட்டி கொழும்புவுக்கு மாற்றப்படும்.
இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இந்தத் தொடர் அமையும் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
