டெல்லி: பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப் பட்டதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா விளக்கமளித்துள்ளார். ‘இதில் இருந்து கடந்து செல்வதற்கு உதவியாக, இருவரது குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து அனைவரும் செயல்பட வேண்டுகிறேன்’ எனவும் ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்த நிலையில், இச்சமயத்தில் நான் பேசுவது அவசியமென்று உணர்கிறேன். நான் ஒரு மிகவும் தனிப்பட்ட வாழ்வு வாழ விரும்புபவன், அது அப்படியே தொடர வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஆனால், இந்தத் திருமணம் நின்றுவிட்டது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
இதோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் காலக்கட்டத்தில், இரு குடும்பங்களின் தனிப்பட்ட உரிமைகளையும் தயவுசெய்து மதிக்குமாறும், நாங்கள் எங்களது சொந்த வேகத்தில் இதைச் சமாளித்து, அடுத்த கட்டத்திற்குச் செல்ல அவகாசம் தருமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நம் அனைவரையும் வழிநடத்த ஒரு உயர் நோக்கம் இருப்பதாக நான் நம்புகிறேன். எனக்கு அது எப்போதும், எனது நாட்டிற்காக மிக உயர்ந்த அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதுதான். என்னால் முடிந்தவரை இந்தியாவிற்காகத் தொடர்ந்து விளையாடி, கோப்பைகளை வெல்ல நம்புகிறேன், என் கவனம் என்றென்றும் அதன் மீதே இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
