×

வந்தே பாரத் ரயில் மோதி நர்சிங் மாணவர், மாணவி பலி: தற்கொலையா? போலீஸ் விசாரணை

பெங்களூரு: பெங்களூரு சிக்கபானவரா ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் இளம்பெண், வாலிபர் உடல் கிடந்தது. தகவலறிந்து யஷ்வந்தபுரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். 2 பேரும் பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் பலியானவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (20), ஸ்டெர்லின் எலிசா சாஜி (19) இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. சிக்கபனாவாரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மதியம் வெளியில் சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் அவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். வெளியே சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானார்களா? அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Bengaluru ,Chikkabanawara railway ,Yeshwanthpuram railway police ,Bharat ,Belagavi ,Bengaluru… ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...