வாலாஜாபாத்: மஞ்சமேடு – வாரணவாசி சாலையில் சவுடு மண் அளவுக்கு அதிகமாக எடுத்து செல்லும் கனரக லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. வாலாஜாபாத் அடுத்த மஞ்சமேடு – வாரணாசி சாலையை ஒட்டி அகரம், வளாகம், அளவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்கி வருகிறது. சுங்குவார்சத்திரம், வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் பேருந்துகள் இந்த சாலை வழியாகத்தான் நாள்தோறும் சென்று வருகின்றன.
இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் வளைவு பகுதிகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. மேலும் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதில், தற்போது அகரம் கிராமத்தையொட்டி மலைபோல் சவுடு மண் கொட்டப்பட்டுள்ளது. இதனை எடுத்துச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் மஞ்சமேடு, வாரணவாசி சாலை வழியாக வந்து செல்கின்றன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், மஞ்சமேடு – வாரணவாசி சாலையில், அகரம் கிராமம் அருகே மலைபோல் சவுடு மண் குவிக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துச் செல்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தொழிற்சாலை பணிகளுக்காகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சவுடு மண் லாரிகளில் அதிகளவில் எடுத்துச் செல்வதால் சாலையில் மண் துகள்கள் மழை நேரங்களில் சேறும் சகதியமாக மாறுகிறது. மேலும், இங்கு எடுத்துச் செல்லப்படும் சவுடு மண் முறையாக அரசு அனுமதியுடன் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மாவட்ட அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டு அளவுக்கு மீறி எடுத்துச் செல்லும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
