பழநி, நவ. 25:.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. பழநி கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பழநி வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோல் ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பழநியின் புறநகர் பகுதிகளில் டெண்ட் அமைத்து தங்கி உள்ளனர். வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களில் சிலர் மத்தளம், பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவற்றை உருவாக்கி பக்தர்களிடம் வியாபாரம் செய்கின்றனர்.
வடமாநிலத்தவரின் சிறு குழந்தைகள், பெண்கள் போன்றோர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பிச்சை எடுக்கும் நாணயங்களை பொட்டலங்கள் போட்டு கமிஷன் அடிப்படையில் வியாபாரக்கடைகளில் புதிய யுக்தியில் வியாபாரம் செய்து வருகின்றனர். பிச்சை எடுக்கும் நாணயங்களை 95 ரூபாய் பொட்டலங்களாக போடுகின்றனர். அதனை கடைகளில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து நோட்டுகளாக பெற்றுக் கொள்கின்றனர். பக்தர்கள் அதிகளவு வருவதால் ஹோட்டல்கள், பொம்மைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் போன்றோருக்கு சில்லறை நாணயங்கள் அதிகளவு தேவைப்படுகின்றன.
எனவே, வடமாநிலத்தவரிடம் சில்லறை நாணயங்களை ஆவலுடன் பெற்றுக் கொள்கின்றனர். வடமாநிலத்தவருக்கு கமிஷன் கிடப்பதால் பிச்சை எடுத்ததில் கிடைக்கும் நாணயங்களை கடைக்காரர்களிடம் விற்பனை செய்து விடுகின்றனர். வடமாநிலத்தவரின் இந்த யுக்தி தமிழக மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
