×

செங்குந்தபுரத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி

*நகை, பணம் இல்லாததால் எல்இடி டிவி திருட்டு

*மர்ம நபர்களுக்கு வலை

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை முயற்சித்து, நகை, பணம் கிடைக்காததால், எல்இடி டிவியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த செங்குந்தபுரம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன்(51) மற்றும் செல்வராசு (51) இவர்கள் இருவரின் வீடும் அருகருகே உள்ளது. இதில், வேல்முருகன் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி வாகன உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். செல்வராசு பாண்டிச்சேரியில் தனது இளைய மகளுக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அங்கேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், இருவரின் வீட்டிலும் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் முதலில் வேல்முருகன் வீட்டின் முன்பக்க காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பீரோ உடைத்து அதிலிருந்து துணிமணிகளை கலைத்து போட்டுவிட்டு ஒன்றும் இல்லாததால், சுவர் ஏறி குதித்து பக்கத்து வீடான செல்வராசு வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நைலான் பை கவரால் கேமராவை மூடி பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு ஒன்றுமில்லாததால் வீட்டில் இருந்த எல்இடி டிவியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 வீடுகளும் திறந்து கிடப்பதாக உறவினரிடம் தெரிவித்ததன் பேரில் உறவினர்கள் வந்து பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையிலான போலீசார் இரண்டு வீடுகளையும் பார்வையிட்டு, அரியலூர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இரண்டு வீடுகளையும் கைரேகை நிபுணர்கள் வீடுகளில் பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் செங்குந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sengundapura ,SENGUNTHAPURAM ,JAYANGONDAM ,JEWELLERY ,
× RELATED அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக...