*ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருமலை : திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா நடைபெற்றது.திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரமோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. இதனையொட்டி சுப்ரபாத சேவை, சஹஸ்ர நாமர்ச்சனை, நித்ய அர்ச்சனை நடைபெற்றது.
பிரமோற்சவ முதல்நாளில் நான்கு மாட வீதிகளில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்ன வாகனத்திலும் அருள்பாலித்தார்.
3ம் நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் தனலட்சுமி அலங்காரத்திலும், அன்றிரவு சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்தார். 5ம் நாளில் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கஜ வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, 6ம் நாளான நேற்று முன்தினம் சர்வ பூபால வாகனத்திலும், மாலை தங்கத்தேரிலும் தாயார் பவனி நடைபெற்றது. முக்கிய வாகன சேவையான கருட சேவையும் நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டிகை உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்தும், ஏழுமலையானின் திருப்பாதத்துடன் தாயார் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7ம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் ஏழு குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் யோக நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்தார். இதைதொடர்ந்து மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற்றது. முன்னதாக குதிரைகள், காளைகள், யானைகள் அணிவகுத்து செல்ல பக்தர்களின் கலை நிகழ்ச்சிக்கு மத்தியில் வீதி உலா நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டனர்.
இதில் பெசிய ஜீயர் சாமிகள், இ.ஓ. அனில் குமார் சிங்கால், ஜே.இ.ஓ. வீரபிரம்மம், கோவில் துணை இஓ ஹரீந்திரநாத், ஏஇஓ தேவராஜுலு, அதிகாரிகள், அர்ச்சகர்கள் பாபுசுவாமி, நிவாச்சாரியார், அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
