மும்பை: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஆடி வருகிறது. அடுத்ததாக, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
முதல் போட்டி வரும் 30ம் தேதி ராஞ்சியிலும், 2வது போட்டி, டிச. 3ம் தேதி ராய்ப்பூரிலும், 3வது போட்டி டிச. 6ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கவுள்ளன. பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின்போது கழுத்தில் சுளுக்கு மற்றும் காயமடைந்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார்.
2வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்காத அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார். முழு குணம் அடையாததால், அடுத்து நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரிலும் கில் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. இந்திய ஒரு நாள் அணியின் துணைகேப்டனாக செயல்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக அடுத்த இரு மாதங்கள் போட்டியில் பங்கேற்க முடியாது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ஒரு நாள் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கடந்த 2022-23 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக 12 போட்டிகளில் பணியாற்றி உள்ளார். அதன் பின், சுப்மன் கில்லின் வரவால், கேப்டன் பொறுப்பை அவர் இழக்க நேரிட்டது. பிசிசிஐ தேர்வுக்குழு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
* இந்திய ஒரு நாள் அணி வீரர்கள்
கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, திலக் வர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ருதுராஜ் கெயிக்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்
