திருவனந்தபுரம்: இலங்கை- இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் 4 போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வென்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மா 5, கமாலினி 12, ஹர்லீன் தியோல் 13, ரிச்சா கோஷ் 5, தீப்தி சர்மா 7 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.
பின்னர் வந்த அமன்ஜோத் கவுர், கேப்டன் ஹர்மன்பிரித் கவுருடன் ஜோடி சேர்ந்து, 6வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், அமன்ஜோத் 21 ரன்னிலும், ஹர்மன்பிரித் 68 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருந்ததி ரெட்டி, ஸ்நேஹ் ராணா சிறப்பாக ஆடி 14 பந்துகளில் 34 ரன்கள் விளாசினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்தது. இலங்கை தரப்பில், கவிஷா, ராஷ்மிகா, சமாரி அத்தப்பட்டு தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அடுத்த களமிறங்கிய இலங்கை அணியில் ஹாசினி பெரேரா 65 ரன், இமேஷா துலானி 50 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் பந்துவீசிய 6 பவுலர்களும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி, இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
