சிதம்பரம்: சிதம்பரத்தில் போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிவபுரி சாலையில் உள்ள சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வல்லம்படுகை பகுதியை சேர்ந்த நவீன் (25), கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம் (25), வல்லத்துறையை சேர்ந்த அருள்(எ) ஜெயக்குமார்(30) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்த்து, அருள்(எ) ஜெயக்குமார், கவுதம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான நவீன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கஞ்சா மற்றும் கத்தியை உசுப்பூர் ரயில்வே கேட் அருகே நவீன் கூறினார்.
இதையடுத்து, நேற்று காலை 6 மணி அளவில் நவீன் சொன்ன இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்குள்ள புதரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரிடம் நவீன் கொடுத்துள்ளான். பின்னர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஒரு கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஐயப்பனின் இடது கை தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றான்.
அப்போது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தற்பாதுகாப்புக்காக நவீனை இடது கால் முட்டியில் சுட்டு பிடித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
காயமடைந்த காவலர் ஐயப்பனும், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஐயப்பனை சந்தித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார்.
