திருச்சி: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி தராமல் ஒன்றிய அரசு மறுத்திருப்பது காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது தெரிகிறது என்று டிடிவி.தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எஸ்ஐஆர் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதில் வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்து விடலாம். ஒன்றிய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்று கொள்ள வேண்டும்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி தராமல் இருப்பது ஒன்றிய அரசு காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதை போல் தெரிகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வது தான் நாகரிகமாக இருக்கும்.
பீகார் தேர்தலுக்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தமிழகத்தில் எது வெற்றி கூட்டணி என்பதை தேர்தல் முடிவு வெளியானவுடன் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். இந்த முறை அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
