×

திருச்சி ஜங்ஷனில் விஜிலென்ஸ் என கூறி சென்னை போலீசிடம் ரூ.60 லட்சம் பறிப்பு: 2 ரயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது

சென்னை: சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் வளையம்பட்டி அருள் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி(32). இவர் சென்னையில் போலீசாக பணிபுரிகிறார். இவர் கடந்த அக்டோபர் 30ம் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் விரைவு ரயிலில் திருச்சிக்கு வந்தார். அப்போது தனது உறவினர் அளித்த ரூ.60 லட்சம் பணத்தையும் எடுத்து வந்துள்ளார்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் 4வது பிளாட்பாரமில் வந்திறங்கிய ஆரோக்கிய ஜான் கென்னடியிடம், அடையாளம் தெரியாத 2 நபர்கள் தன்னை விஜிலென்ஸ் போலீசார் என தெரிவித்து ரூ.60 லட்சத்தை பறித்து சென்றனர்.  இதுகுறித்த புகாரின் பேரில், ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.60 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றது திருச்சி ரயில்வே போலீசார் ஜான்சன் கிறிஸ்டோகுமார் (43), தீனதயாள் (37) மற்றும் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (40), ராஜேந்திரன் (43) ஆகிய 4 பேர் என தெரிந்தது.

இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ரயில்வே போலீசார் ஜான்சன் கிறிஸ்டோகுமார், தீனதயாள் ஆகிய இருவரையும் திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai Police ,Trichy Junction ,Chennai ,Aurokiya John Kennedy ,Kalaiyar Temple Valayampatti Arul City, Sivaganga District ,Trichy ,Pandian High Speed Train ,
× RELATED தாம்பரம் அருகே தேர்தல் போட்டியால்...