×

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடியில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 லட்சம் மாணவர்கள் பயன்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 லட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் கொரோனா காலக் கற்றல் இடைவெளியைக் குறைத்திட 19.10.2021 அன்று “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2021-22 முதல் 2024-25ம் கல்வியாண்டு வரை ரூ,660.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 2024-2025ம் ஆண்டில் 50,000 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வரையில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7.97 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அன்றாடம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிப்பு இயக்கம் ஒரு முன்னோடித் திட்டமாக 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு, 914 அரசு பள்ளிகளில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள 66,6 18 மாணவர்கள் பயனடைந்தனர்.

கோடை விடுமுறைக் காலத்தில், குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் அடங்கிய தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்று அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வழிகாட்டப்பட்டது. மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு மாணவர்கள் எழுச்சி பெற்றனர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” திட்டம் தொடங்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு நிலை வாரியான பயிற்சி நூல்கள், ஆசிரியர்களுக்கு விரைவுத் துலங்கல் குறியீட்டுடன் கூடிய ஆசிரியர் கையேடுகள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியைக் கற்கும் காலத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23ம் கல்வியாண்டில் 2,09,365 மாணவியர்களுக்கும், 2023-24ம் கல்வியாண்டில் 2,73,596 மாணவியர்களுக்கும், 2024-25ம் கல்வியாண்டில் 4,13,072 மாணவியர்களுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் காணொலிகளாக உருவாக்கி கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காணொலிகள் தயாரிப்பதற்காக, மெய்ந்நிகர் ஒளிப்பதிவுக்கூடம் உள்ளிட்ட 5 உயர்தொழில்நுட்பப் படப்பதிவுக்கூடங்கள் மற்றும் ஒரு ஒலிப்பதிவுக்கூடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்காணொலிகள் மூலம் 58,721 பள்ளிகளில் உள்ள 1,23,73,598 மாணவர்களும் 5,32,909 ஆசிரியர்களும் பயன்பெறுவர். 2021-22 ம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24ம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் சர்வதேசத் தரத்திலான “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” ரூ.218.19 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்பட்டு, 3,64,521 புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டில் 8,36,260 வாசகர்கள் இந்நூலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக ஊக்குவிக்க சென்னை புத்தகக்கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2022-23ம் கல்வியாண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நதி நாகரிக மரபு அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை, கோவை மாவட்டத்தில் சிறுவாணி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி, மதுரை மாவட்டத்தில் வைகை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

2023-2024ம் ஆண்டு முதல் இலக்கியத் திருவிழாக்களுடன் கூடுதலாக இளைஞர் இலக்கிய விழா ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் செலவில் நடத்தப்பட்டு வருகிறது. வயது வந்தோர் கல்வித் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய 228 சிறந்த கற்போர் மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.

15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் பொருட்டு 2022-23ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.9.83 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15 இலட்சம் கற்போர் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

இவ்வாறாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்திய அளவில் சிறப்பான பல சாதனைகளைப் படைத்துப் பெருமைக்குரிய துறையாக உயர்ந்து சிறந்து விளங்குகிறது.

* அரசுப் பள்ளிகளில்
6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியைக் கற்கும் காலத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23ம் கல்வியாண்டில் 2,09,365 மாணவியர்களுக்கும், 2023-24ல் 2,73,596, 2024-25ல் 4,13,072 மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,Corona ,
× RELATED ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து