- அதிமுக செயற்குழு - பொதுக்குழு
- சென்னை
- அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- அதிமுக செயற்குழு...
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு வருகிற 10ம் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், டிச.10ம் தேதி(புதன் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் வியூகம், வெற்றி வாய்ப்பு, கள நிலவரம், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதற்கான வியூகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்க எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இதனால் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும்? என்ற பர பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
* செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என அதிமுக தெரிவித்துள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
