×

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனையடுத்து கடந்த 10 நாட்களாக மழை வாய்ப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால், இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ம் தேதி(இன்று) வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக 25ம் தேதி(நாளை) வாக்கில், குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25ம் தேதி(நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் 27ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25ம் தேதி மற்றும் 26ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், ஏனைய தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 24ம் தேதிக்குள்(இன்று) கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 26 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 25 செ.மீ, காக்காச்சி 23; மாஞ்சோலை 21 செ.மீ, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் தலா 13 செ.மீ, கயத்தார் 11 செ.மீ, காயல்பட்டினம் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

* ‘சென்யார்’ புயல் தமிழகத்தை தாக்குமா?
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிற 26ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில் `சென்யார்’ என பெயரிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

`சென்யார்’ என்றால் அரபு மொழியில் `சிங்கம்’ என பொருள் என கூறப்படுகிறது. இந்த சென்யார் புயல் தமிழகத்தை தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது எங்கே கரையை கடக்கும் என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை. ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Kumari Sea ,Tamil Nadu… ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம்...