×

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிககனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிககனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Tuthukudi ,Tenkasi ,Nella ,Kumari ,Chennai ,southwest Bengal region ,Tirunelveli ,Kanyakumari ,South Sri Lanka ,
× RELATED அரசு கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம்...