×

சென்னை மாநகரில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மை பணி: மாநகராட்சி தகவல்

 

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

தூய்மை பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயானபூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்த தீவிர தூய்மை பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சுவரொட்டிகளை அகற்றுதல், பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி உள்ள செடிகள், குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றுதல், தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளை கண்காணிக்க உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CHENNAI MANAR ,Chennai ,Chennai Municipality ,Chennai Municipal Corporation ,
× RELATED விறுவிறுப்பாக தயாராகும் திமுக...