×

வெ. இண்டீஸ் வாஷ்அவுட் வெளுத்து வாங்கிய நியூசி: 3வது போட்டியிலும் அபாரம்

ஹாமில்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 3-0 என்ற புள்ளிக் கணக்கில், வெஸ்ட் இண்டீசை வாஷ் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே நடந்த 2 டெஸ்ட்களிலும் நியூசிலாந்து வென்ற நிலையில் ஹாமில்டன் நகரில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் (38 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால், 36.2 ஓவர்கள் மட்டும் எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அதையடுத்து, 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் டெவான் கான்வே 11, ரச்சின் ரவீந்திரா 14 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர். இருப்பினும் பின்னர் வந்த மார்க் சாப்மேன் அதிடியாக ஆடி 63 பந்துகளில் 64 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 9, டாம் லாதம் 10 ரன்னில் அவுட்டானபோதும், நியூசிலாந்து அணி, 30.3 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 162 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன், 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Tags : New Zealand ,West Indies ,Hamilton ,New Zealand… ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...