மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் ரூ.20 கோடியில் ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்துடன் செயற்கை இழை ஹாக்கி மைதானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் நவீன வசதிகளுடன், சர்வதேச தரத்தில் 1,500 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் உலக கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் வருகிற 28ம் தேதி துவங்குகின்றன. இதில் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. மதுரை, சென்னை என மொத்தம் 72 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.28ல் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெர்மனி – தென்ஆப்ரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. உலகத்தரம் வாய்ந்த இந்த ஹாக்கி மைதானத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதியை அயர்லாந்து நாட்டு வீரர்கள் சந்தித்து பேசினர்.
