×

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந.செகதீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நூல்களும் ஏராளம். தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாக கலைமாமணி, சாகித்ய அகாடமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளை பெற்று அவற்றுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும், 2022ம் ஆண்டு கலைஞரின் பிறந்தநாளில் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம். மேலும், அவர் இயற்றிய ‘கீழடியில் கேட்ட தாலாட்டுகள்’, ‘நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் வாழ்க்கை வரலாறு குறித்த ‘மகாகவி’ என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்கு தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Erode Thamizhanban ,Chennai ,N. Sekatheesan ,Pavendar Bharathidasan… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...