×

பொறுப்பு டிஜிபியை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான் டிஜிபி நியமனம் பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு அருகதை இல்லை: அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டை: பொறுப்பு டிஜிபியை அறிமுகப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு டிஜிபி பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக தாக்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய ஒன்றிய பாஜ அரசு, அது டிஜிபி விவகாரம் மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். ஏன் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று எடப்பாடி கேட்கிறார்.

தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டிஜிபி என்று அறிமுகப்படுத்தியவர்களே அதிமுக தான். 2011ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டிஜிபியாகவும், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆகவும் அதிமுக அரசுதான் கொண்டு வந்தது. ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டிஜிபியாக கொண்டு வந்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது பொறுப்பு டிஜிபி கொண்டு வந்ததை பற்றி பேசி ஒன்றிய அரசின் விசுவாச அடிமை என்பதை எடப்பாடி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டிஜிபி பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அவருக்கு கிடையாது.

ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாடு விவகாரத்தில் தாங்கள் விரும்பிய டிஜிபியை தான் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு யாரையெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பி கேட்டதோ அவர்களை எல்லாம் தடுத்து வருகிறார்கள். டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மாநில அரசு விருப்பப்படி தான் டிஜிபி நியமனம் இருக்கும். ஆனால் அத்தகைய சூழல் தற்போது இல்லை. அதிமுக ஆட்சியில் சூரப்பாவை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமித்தார்கள். தமிழ்நாட்டில் காவிரி பிரச்னை இருந்தபோது அதிமுக அரசில் கர்நாடகவை சேர்ந்தவரை துணைவேந்தராக மோடி அரசு நியமித்தது.

அதேபோல் ஒன்றிய பாஜ அரசின் ஆட்களை தான் டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது. இது தமிழ்நாடு மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பொறுப்பு டிஜிபியை வைத்து சட்டம் ஒழுங்கு எப்படி பாதுகாக்க முடியும் என்று எடப்பாடி கோமாளித்தனமான கேள்வியும் முன் வைக்கிறார். அவரது ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய நிலையில், தற்பொழுது பொறுப்பு டிஜிபி குறித்து கேட்பது வெட்கக்கேடான செயல். அதிமுக ஆட்சியில் அலங்கோலமாக இருந்த சட்டம் ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்று கேட்கும் எடப்பாடி, 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிப்பது பற்றி உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஏன் தடை வாங்கினார்? அப்போது சரியாக இல்லை தற்போது சரியாக இருக்கிறதா சிபிஐ? இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,DGP ,Edappadi ,Minister ,Raghupathi Kattam ,Pudukottai ,Raghupathi ,Edappadi Palaniswami ,Thirumayat ,Edappadi Palaniswami… ,
× RELATED சொல்லிட்டாங்க…