புதுடெல்லி: தீவிரவாத தொடர்பு மற்றும் நிதி மோசடி புகாரில் பல்கலைக்கழகம் சிக்கியதால், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மாணவர்களிடம் சுமார் ரூ.415 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் மோசடி செய்ததாகக் கூறி, பல்கலைக்கழகத் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ரத்து செய்துள்ளதுடன், பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கல்வி நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எம்பிபிஎஸ் படிப்பிற்காக சுமார் ரூ.74.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ள மருத்துவ மாணவர்கள் உட்பட சுமார் 600 மாணவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் தற்போது அந்தரத்தில் ஊசலாடுகிறது.
