- பிரம்மோத்சவம்
- திருச்சானூர்
- பத்மாவதி தாயார் வீதியுலா
- சர்வ பூபால வாகனம்
- திருமலா
- பத்மாவதி தையார் பவானி
- பத்மாவதி தாயார் கோயில்
- திருப்பதி
திருமலை: திருச்சானூரில் பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டும்
லட்சுமி ஆரம் உள்பட பல்வேறு நகைகளை அணிந்து கஜவாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தாயார் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது மாட வீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். மேலும் வீதியுலாவின்போது பழங்குடியினரின் நடனம், பரதநாட்டியும், கோலாட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடியபடி கலைஞர்கள் பங்கேற்றனர். அதேபோல் சுவாமியின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் பக்தர்கள் சுவாமிகளின் வேடமணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து இன்றிரவு கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளார்.
