×

போலி நாடகம் நடத்தும் பிரதமரின் முகத்திரையை கிழித்தெறிவோம்: வைகோ ஆவேசம்

கடலூர்: போலி நாடகம் நடத்தும் பிரதமரின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜனவரி மாதம் சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே ஆணையம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று நேர்காணல் நடத்தி தொண்டர்களை தேர்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல இடங்களில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்ததான் சமத்துவ நடை பயணம். இன்று பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்கள் ஏற்படுகிறது. சாதிப் பெயரால் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்திதான் சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளேன். நல்லாட்சி நடத்துகின்ற திமுக தலைமையிலான ஆட்சி 2026க்கு பின்னரும் நீடிக்கும்.
ஒன்றிய அரசு படுமோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறது.

மதுரை, கோவையை விட ஜனத்தொகை குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அளித்த அறிக்கையை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அவர்களால் இங்கு காலூன்ற முடியவில்லை என்பதற்காக எந்தெந்த விதத்தில் வஞ்சிக்க முடியுமோ அந்தந்த விதத்தில் வஞ்சிக்கிறது. இருக்கிற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வெளியில் இருந்து வாக்காளர்களை இணைக்கவும் படுமோசமான மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மீது பற்று வைத்திருப்பதுபோல் போலி நாடகத்தை பிரதமர் மோடி நடத்தி கொண்டிருக்கிறார். அவரின் முகத்திரையை நாங்கள் மக்கள் மன்றத்தில் கிழித்தெறிவோம் என்றார்.

Tags : Cuddalore ,Rev. Secretary General ,Wiko ,General Secretary ,Cuddalore District ,Puduchatram ,
× RELATED ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி...