×

ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி குறித்து முடிவு திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது: நயினாருக்கு டிடிவி பதிலடி

 

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அமமுக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: ஜெயலலிதா பிறந்தநாளில் அமமுக எந்த கூட்டணியில் இடம் பெறுவோம் என்பதை முடிவு செய்வோம். எடப்பாடி பழனிசாமியை தாண்டி எங்களுக்கு வேறு யார் மீதும் வருத்தம் இல்லை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் அந்த விஷயத்தில் அரசாங்கமும் சரி, நீதிமன்றங்களும் சரி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். எனவே எந்த ஒரு கட்சியும், அமைப்பும், மதத்தை, தெய்வத்தை,தெய்வத்தின் பெயரை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் இருப்பதே தேவையற்ற குழப்பங்களை உருவாக்காமல் இருக்கும். இவ்வாறு கூறினார்.

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, ‘‘அயோத்தியில் ராமர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் உள்ளது. அப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது. நயினார் நாகேந்திரன் அவர் வகிக்கும் பொறுப்பிற்காக அதை கூறி இருக்கலாம்’’ என பதிலளித்தார்.

* அதிமுகவை பா.ஜ மிரட்டுகிறதா?

அதிமுகவை பா.ஜ மிரட்டுகிறதா என்ற கேள்விக்கு, ‘ஒரு சிலரின் சுயநலம், சுய லாபம், பதவி ஆசைக்காக அம்மாவின் தொண்டர்களை பிரித்து விட்டார்கள். தேர்தல் முடிவுகள் கொடுக்கின்ற பாடத்திற்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும் எம்ஜிஆரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்சியை வழிநடத்த ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என பாஜ தலைவர்கள் 2021 தேர்தலிலும் முயற்சி செய்தார்கள். தற்போதும் முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்போது மத்தியஸ்தர் (பாஜ) தேவை. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து சுமுக முடிவெடுக்க பேசுவது மிரட்டுவதாகவோ, தலையீடு செய்வதாகவோ நான் கருதவில்லை. நட்பு ரீதியாகவே அணுகி பேசுகிறார்கள்’ என்று டிடிவி தினகரன் கூறினார்.

* இலைகள் உதிரவில்லை விழுதுகள் விலகுகிறது

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 53 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்தவர். அதிமுக இணைப்பை ஏற்காதவர்கள் அவரை கட்சியிலிருந்து விலக்கினார்கள். அந்த தவறுகளை செய்பவர்களை திருத்துவதற்கு நாங்கள் ஒரு வழியில் முயற்சி செய்தால், அவர் ஒரு பாதையில் பயணிக்கிறார். அவர் கோபதாபத்தில் எடுத்த முடிவாக பார்க்கவில்லை. நிதானமாக சிந்தித்து முடிவெடுத்து இருக்கிறார். ‌செல்லூர் ராஜு எப்போதும் காமெடியாக பேசிக் கொண்டிருப்பவர். அதிமுக என்னும் ஆலமரத்தில் இருந்து இலைகள் உதிரவில்லை. செங்கோட்டையன் போன்ற விழுதுகள் விலகிச் செல்கிறது’’ என்று தெரிவித்தார்.

* தவெகவுடன் கூட்டணியா?

தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, ‘தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமமுக இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக வெற்றி பெறும் கூட்டணியாக அமையும். கூட்டணி தொடர்பாக எந்த கண்டிஷனும் போடப்போவதில்லை. நட்பு ரீதியில் பேசுகிறோம்’ என்றார்.

 

Tags : Jayalalithaa ,Ayodhya ,DTV ,Nainar ,KOWAI ,AMUKA WEST ZONE ,KOWAI KUNIAMUTHUR AREA ,Dinakaran ,secretary general ,Aamuka ,Ammuka ,Jayalalitha ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...