சென்னை: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என அனைவரையும் வாக்காளர் நிலை அலுவலகர்களாக்கி (பிஎல்ஓ) களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
இவர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எஸ்ஐஆர் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். மீண்டும் சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை சென்று விண்ணப்பம் பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இப்போதுள்ள பிரச்னையே எஸ்ஐஆர் விண்ணப்பத்தை எப்படி நிரப்ப வேண்டும் என பொதுமக்களுக்கும், வாக்காளர் நிலை அலுவலர்களுக்கும், ஏன் அரசியல்வாதிகளுக்கும்கூட தெரியவில்லை என்பதுதான்.
அடித்தல், திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்வது பொதுமக்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரே முகவரியில் இருப்பார்கள். அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் சென்னை போன்ற நகர் பகுதியில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு இருக்காது. ஆண்டுக்கு ஒரு வாடகை வீட்டில் இருப்பார்கள். பல தொகுதிகளுக்கு மாறும்ம் நிலை உள்ளது. இப்படி இருக்கும்போது, எப்படி 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியல் பற்றி தெரியும். தெரிந்தாலும் வார்டு, பாகம், வரிசை எண் எப்படி தெரியும்.
பலருக்கு கணினி பற்றிய பொது அறிவு இருக்காது. எப்படி பூர்த்தி செய்வது என்பது பெரிய தலைவலியாக இருக்கிறது. இனி நமக்கு வாக்காளர் அட்டை கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கே பலர் வந்து விட்டனர். வீடுவீடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பத்தை கொண்டு செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒருவழி பண்ணி விடுகிறார்கள்.
ஓரளவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வையுங்கள், ஒரு வாரத்தில் வந்து வாங்கிக் கொள்கிறோம் என சொல்கிறார்கள். மீண்டும் விண்ணப்பத்தை வாங்க சென்றால், பூர்த்தி செய்ய தெரியவில்லை என்ற பதிலே பலரிடமும் வருகிறது. வாக்காளர் நிலை அலுவலர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். சிலர் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்பும் நிலையும் உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த விண்ணப்பங்கள் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கீழ் உள்ள அதிகாரிகளிடம் கோபத்தை காட்டுகிறார்கள். இதனால், தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சப்-கலெக்டர்கள் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் நிலை அலுவலராக உள்ள ஆசிரியர்களை மிரட்டுகிறார்கள்.
நேற்று கூட கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மேடவாக்கம், சந்தோஷபுரம், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ), அங்குள்ள பெண் ஆசிரியர்களை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளார். ”நீங்கள் ஏன் பள்ளியில் இருந்து வேலை பார்க்கிறீர்கள், வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பத்தை கொடுத்து, நிரப்பி வாங்குங்கள்.
மேல் அதிகாரிகள் எங்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்” என்று கூறியுள்ளார். அவர் போன சிறிது நேரத்தில் செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் சிலரும் அரசு வாகனத்தில் வந்து ஆசிரியர்கள் மனம் புண்படும்படி பேசியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ”ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுக்க சென்றால் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது.
அப்போதும் ஆசிரியர்களைதான் அதிகாரிகள் குறை சொல்வார்கள். பெண் ஆசிரியர்கள் என்று கூட பார்க்காமல் உயர் அதிகாரிகள் தகாத வார்த்தையால் பேசுகிறார்கள்” என்று கூறினர். பெற்றோர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இதுபோன்ற நடவடிக்கையால் பெண் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
