திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் சின்னகடை வீதியில் தனியார் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேனில், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை டிரைவர் ரவிச்சந்திரன் (50) பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
விருதுநகர் – மதுரை நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் – உசிலம்பட்டி சாலை பிரிவு அருகே வந்தபோது, திடீரென வேனின் டீசல் டேங்க் பகுதியிலிருந்து புகை கிளம்பியது. உடனே டிரைவர் ரவிச்சந்திரன் வேனை ஓரமாக நிறுத்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வேனில் தீப்பிடிக்க துவங்கவே டிரைவர், உதவியாளர் பாண்டியம்மாள், மின்னல் வேகத்தில் செயல்பட்டு 25 மாணவ, மாணவிகளை கீழே இறக்கினர்.
அப்பகுதி மக்களும் வந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வேன் மளமளவென் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதனால் விருதுநகர் – மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
