×

கும்மிடிப்பூண்டி அதிமுக மாஜி எம்எல்ஏ கொலை வழக்கு பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கி் 3 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் திங்கள் கிழமை தண்டனை விபரத்தை தெரிவிக்கவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.

கடந்த 2005 ஜனவரி 9ம் தேதி அதிகாலைபெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள இவரது வீட்டில் புகுந்த 5 பேர் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். குற்றவாளிகளை பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் என கண்டுபிடித்தது.  முக்கிய குற்றவாளியை பிப்ரவரி 1ம் தேதி கைது செய்தது.

மார்ச் மாதத்தில் அரியானா, ராஜஸ்தானனை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் முக்கிய குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.

வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 4 பேருக்கு எதிரான இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஜெயில்தார் சிங் தவிர மற்ற 3 பேரும் குற்றவாளிகளாவர். அவர்களுக்கான தண்டனை விவரம் நவம்பர் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

* கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது அந்த வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. கொல்லப்பட்ட எம்எல்ஏவின் மகன் விஜயகுமார் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

* கோர்ட்டில் ஜாங்கிட்
தீர்ப்பை தெரிந்துகொள்வதற்காக அப்போதைய விசாரணை அதிகாரியும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ஜாங்கிட் கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

Tags : KUMMIDIPUNDI MAYJI ,BAVARIA ,CHENNAI EXTRA SESSION COURT ,Chennai ,Khummidipundi Constituency ,Adamuka M. L. A. K. ,Chennai Extra-session Court ,Sudarzanam ,Thiruvallur District ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...