சென்னை: அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-26 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இவற்றில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள் இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள்.
பெங்களூருவில் இந்த பேருந்துகளை கட்டமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் முதல்கட்டமாக 8 பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 பேருந்துகள் ஒருசில வாரங்களில் பணிமனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. நீல நிறத்திலான இந்த வால்வோ மல்டி ஆக்சில் பேருந்தின் நீளம் 15 மீட்டர். ரூ.1.75 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்த பேருந்தின் முன், பின் பகுதிகளில் எண்ம வழித்தட பலகை உள்ளது. 51 இருக்கைகள் உள்ளன.
செமி ஸ்லீப்பா் வகையில் முழங்கால்கள் வரை வைக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பொருட்களை வைக்க பேருந்தின் கீழ் தளத்தில் 14 மீட்டர் அளவிலான இடைவெளியும் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால், பயணிகளைப் பாதுகாக்கும் விதமாக, பேருந்தின் உள்ளேயே தண்ணீர் தெளிப்பான் குழாய்களும், இருக்கைகளில் கைபேசி சார்ஜிங், ரீடிங் லைட் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் பேருந்தின் உயரத்தையும் ஏற்றி இறக்கிக்கொள்ளலாம். தாழ்வான பகுதியில் பேருந்தை நிறுத்தும்போது, ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள ஹேண்ட் பிரேக்கை தவறுதலாக யாராவது எடுத்து விட்டாலும், அதன் அருகில் உள்ள பொத்தானை அழுத்தினால்தான் பேருந்தை மீண்டும் இயக்கும் வகையில் ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து வசதி கொண்ட சொகுசு பேருந்துகளை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து மேலாண் இயக்குனர் மோகன் கூறுகையில், ‘போக்குவரத்து துறையின் புதிய முன்னெடுப்பாக மல்டி ஆக்சில் வால்வோ பேருந்துகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் காலத்தை கருத்தில் கொண்டு முன்பே அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்த பேருந்து கட்டணம் சாதாரண எஸ்.இ.டி.சி பேருந்துகளை காட்டிலும் சற்று கணிசமாக உயர வாய்ப்புஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
