×

பஞ்சாயத்து தேர்தல் குறித்து முரண்பட்ட கருத்து: அமைச்சரா? அதிகாரியா? யார் பெரியவர்; மாநில அரசு முடிவு செய்யட்டும்; இமாச்சல் ஆளுநர் காட்டம்

சிம்லா: மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் குறித்த முரண்பட்ட கருத்துக்களை அடுத்து அமைச்சர் பெரியவரா அல்லது அதிகாரியா என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 9ம் தேதியிட்ட அறிவிப்பில் மாநில நிர்வாக குழுவின் தலைமை செயலாளரும், தலைவருமான சஞ்சய் குப்தா, மழைக்காலங்களில் சாலைகள் மற்றும் தனியார் மற்றும் பொதுசொத்துக்கள் சேதமடைந்த நிலையில் சரியான இணைப்பு மீட்டெடுக்கப்பட்ட பின்னரே பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று கூறியிருந்தார். எனினும் ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் அனிருத் சிங், தேர்தல்கள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறுகையில்,” தேர்தல்கள் சரியான நேரத்தில் நடக்கும் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு கீழ் பணியுரியும் 7 துணை ஆணையர்கள் உட்பட அதிகாரிகள் தற்போதைய சூழலில் தேர்தலுக்கு தயாராக முடியாது என்று தெரிவித்துள்ளனர். இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது. மேலும் அமைச்சர் பெரியவரா?அல்லது அதிகாரி பெரியவரா? என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.விதான் சபா தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படாவிட்டால் மாநிலத்தில் நிலையற்ற சூழல் ஏற்படும். மேலும் பஞ்சாயத்து தேர்தல்களை பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணையமும், அரசும் அமர்ந்து தேர்தலை நடத்துவதற்கான பிரச்னையை தீர்க்க வேண்டும். தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Panchayat ,Himachal ,Pradesh ,Governor ,Shimla ,Himachal Pradesh ,Shiv Pratap Shukla ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...