பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையின் போது கண்டறியப்பட்ட தகவல்கள் குறித்து பெல்தங்கடி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரணாப் மொஹந்தி தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய நிலையில், சுமார் 4000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை எஸ்.ஐ.டி விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயாமா, பெல்தங்கடி கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சின்னையா, மகேஷ் ஷெட்டி திமரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் டி.விட்டல் கவுடா, சுஜாதா பட் மற்றும் இந்த சதியில் தொடர்புடைய தவறான ஆதாரங்கள், சாட்சியங்களை வழங்கியது குறித்து விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 3,923 பக்கங்களைக் கொண்ட எஸ்.ஐ.டி-யின் அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. அதே சமயம் நூற்றுக்கணக்கான சடலங்கள் தர்மஸ்தலாவை சுற்றி புதைத்ததாக சின்னையா அளித்த புகார் பொய்யானது என்றும் தெரியவந்துள்ளது.
