×

73 வீராங்கனைகளை வாங்க வரும் 27ம் தேதி டபிள்யுபிஎல் ஏலம்: மல்லுக்கு நிற்கும் 5 அணிகள்

புதுடெல்லி: டபிள்யுபிஎல் மகளிர் டி20 கிரிக்கெட்டில் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம், வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகளை போல், மகளிர் பங்கேற்கும் டபிள்யுபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2023ம் ஆண்டு பிசிசிஐயால் துவங்கப்பட்டது. இதுவரை 3 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 4வது டபிள்யுபிஎல் தொடர், வரும் 2026 ஜனவரி 7 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டபிள்யுபிஎல் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் 73 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்காக மொத்தம் 277 வீராங்கனைகளின் பெயர்கள் ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தில் 50 இந்திய வீராங்கனைகளும், 23 வெளிநாட்டு வீராங்கனைகளும் வாங்கப்பட உள்ளனர். அதற்கான ஏல பட்டியலில், 194 இந்திய வீராங்கனைகளும், 83 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அடிப்படை ஏலத்தொகையாக 19 பேருக்கு, ரூ.50 லட்சம், 11 பேருக்கு ரூ. 40 லட்சம், 88 பேருக்கு ரூ. 30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் அடிப்படை விலை உள்ள பிரிவில் நியூசிலாந்து வீராங்கனைகள் சோபி டிவைன், அமெலியா கெர், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியா வீராங்கனைகள் மெக் லேனிங், ஆலிஸா ஹீலி, போபி லிட்ச்பீல்ட் உள்ளிட்டோர் இடம்பற்றுள்ளனர்.

Tags : WPL ,New Delhi ,WPL Women's T20 cricket ,IPL ,WPL T20 cricket ,BCCI ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி