×

2வது டெஸ்டில் இன்று தென் ஆப்ரிக்கா அணியை தெறிக்க விடுமா இந்தியா? கேப்டனாக களமிறங்கும் ரிஷப்

கவுகாத்தி: இந்தியா – தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் இன்று துவங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள, டெம்பா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபாரமாக ஆடி, 30 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்ற பெருமையை நீண்ட காலமாக நிலைநாட்டி வந்த இந்தியா முதல் முறையாக மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் துவங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் பேட்டிங்கின்போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு அவதிப்பட்ட கேப்டன் சுப்மன் கில் பூரண குணம் அடையாததால் இன்றைய போட்டியில் ஆட மாட்டார், அவருக்கு பதில், இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார். முதல் டெஸ்டில் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடிய தெம்புடன் களமிறங்கும் தென் ஆப்ரிக்கா அணி, 2வது டெஸ்டிலும் இந்திய அணியை வீழ்த்தும் திட்டத்துடன் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, சொந்த மண்ணில் முதல் டெஸ்டில் வெற்றியை தாரைவார்த்த சோகத்துடன் இன்று களமிறங்கும் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் சவாலை எதிர்கொண்டு வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் நோக்கில் வியூகம் வகுக்கும் என தெரிகிறது.

இன்றைய போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட்டின் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய பேட்டிங்கில், 3வது ஆட்டக்காரராக சாய் சுதர்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்ரிக்க வீரர்களை வீழ்த்த, ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் சிறப்பு வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். தென் ஆப்ரிக்கா தரப்பில் கேப்டன் டெம்பா பவுமா அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். இரு தரப்பும் வெற்றிக்கனியை பறிக்க தீவிரம் காட்டும் என்பதால் இன்று துவங்கும் போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.

* களமிறங்கும் வீரர்கள்
இந்தியா: ரிஷப் பண்ட் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், தேவ்தத் படிக்கல், ஆகாஷ் தீப்.
தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), கோர்பின் பாஷ், டிவால்ட் புரூவிஸ், டோனி டி ஜோர்ஸி, ஜுபேர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ யான்சன், கேஷவ் மகராவ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, ரையான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரெய்ன்.

Tags : India ,South Africa ,Rishabh ,Guwahati ,Demba Bawuma ,Kolkata… ,
× RELATED இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே...