- பார்வதமலை
- மகா தீபம்
- கலசபாக்கம்
- பிரம்மராம்பாய் அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோவில்
- தென்மகாதேவமங்கலம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- பர்வதமலை மலை
கலசபாக்கம், நவ.22: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் பர்வத மலையில் பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. நந்தி வடிவமான பர்வத மலையில் ரிஷிகளும் முனிவர்களும் இன்றும் காட்சி தருவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான கார்த்தியை மகா தீபம் வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பக்தர்களுக்கு வேண்டிய சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதி, பாதுகாப்பு வசதி மேற்கொள்வது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:
வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். மேலும் மலை அடிவாரம், பாதி மண்டபம் சன்னிதானம் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு உரிய நேரத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். மலை அடிவாரத்தில் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களை பரிசோதனை செய்து மலையேற அனுமதிக்க வேண்டும். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதில் டிஆர்ஓ ராம் பிரதீபன், திட்ட இயக்குனர் மணி, மாவட்ட வன அலுவலர் சுதாகர், ஆர்டிஓ சிவா, இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் சண்முகசுந்தரம், போளூர் டிஎஸ்பி மனோகரன், பிடிஓ பாலமுருகன், தாசில்தார் தேன்மொழி, வட்டார மருத்துவ அலுவலர் விஜய், வனசரகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
