×

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கட்டுக்குள் வந்த மக்களின் வாந்தி, வயிற்றுப்போக்கு: ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் அரசின் தொடர் முயற்சியின் எதிரொலியாக, அப்பகுதி மக்களிடையே வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை கட்டுக்குள் வந்தன. பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட போஸ்ட் ஆபீஸ் தெரு, எல்லாபத்ரி தெரு, ஈச்சம்பாடி, ராதா நகர், ஆஞ்சநேயர் நகர், சாலியர் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, அரசு சார்பில், பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் 3 மருத்துவ முகாம்கள் அமைத்து, வீடு வீடாக மருத்துவர்கள் சென்று, அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மேலும், அப்பகுதிகளில் தூய்மை பணிகளை உறுதிப்படுத்தும் வகையில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜெயக்குமார், செயல் அலுவலர் ராஜகுமார், உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோரை கொண்ட 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஏற்கெனவே பைப்லைன்களில் வழங்கப்பட்ட குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு டிராக்டர்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர எல்லாபத்ரி தெரு, போஸ்ட் ஆபீஸ் தெருவில் பழைய பைப்லைன்களை அகற்றி, புதிய பைப்லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சோளிங்கர் சாலையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலமாக இடித்து அகற்றி, கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

இப்பணிகளில் பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை, கவுன்சிலர் ஸ்வப்னா முரளி ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் நேற்று வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இதற்கான பணிகளை மேற்கொண்ட பேரூராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Pallipattu Town Panchayat ,Pallipattu ,Post Office Street ,Ellapathri Street ,Echambadi ,Radha Nagar ,Anjaneyar Nagar ,Saliyar Street ,Pallipattu Town Panchayat… ,
× RELATED தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10...