×

உலகக்கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்கு காங்கேயம் காளையை சின்னமாக அமைத்தது ஜல்லிக்கட்டுக்கு பெருமை

*முதல்வர், துணை முதல்வருக்கு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் நன்றி

மதுரை : உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி சின்னமாக காங்கேயம் காளை பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு, முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு, மாடுபிடி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சென்னை, மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் ஹாக்கி மைதானத்தில் 14வது ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி நவ. 28ம் தேதி துவங்கி டிச. 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

கோயில் நகர் பெருமைக்குரிய மதுரையின் அடையாளங்களாக பாரம்பரியம், கலாச்சாரம், வீரம், ஜல்லிக்கட்டு என்று பட்டியல் நீள்கிறது. தை மாதம் பிறந்து விட்டால் மதுரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி வரும் 28ம் தேதி முதல் நடைபெறுவதால், மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்திற்கும் ‘காங்கேயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையை பிரபலப்படுத்தியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் யோகதர்ஷினி கூறும்போது, ‘‘10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து வருகிறேன். உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்த ஜல்லிக்கட்டு காளையின் சின்னத்தை இடம்பெறச் செய்தல் மூலம் எங்களது காளைகளின் பெருமையை உலகறிய செய்துள்ளனர். இதற்கு காரணமான முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி’’ என்றார்.

மாடுபிடி வீரர் மற்றும் ஹாக்கி வீரரான காளிதாஸ் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக கலந்து கொள்பவர்களும், ஹாக்கி மைதானத்தில் விளையாடுபவர்களும் ஒரே மனப்பக்குவத்தில் தான் இருக்க முடியும்.

மனது ஒருநிலைப்பட்டு அமைதியான ஒரு நிலைக்கு சென்றால்தான் காளையை அடக்க முடியும், ஹாக்கியில் அமைதியான ஆழ்நிலை தியானத்தில் இருப்பது போல் விளையாடினால்தான் வெற்றியை அடைய முடியும். ஹாக்கிக்கு மிகப்பொருத்தமானதாக ஜல்லிக்கட்டு காளை சின்னத்தை அறிவித்து வடிவமைத்தது பெருமிதம் கொள்ளச் செய்கிறது’’ என்றார்.

Tags : Jallikattu ,Junior Men's Hockey World Cup ,Chief Minister ,Deputy Chief Minister ,Madurai ,Tamil Nadu Games ,Chennai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...