×

7 மாவட்டங்களுக்கு 2,643 டன் உரம் ரயிலில் காட்பாடி வந்தது லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர், திருவண்ணாமலை உட்பட

வேலூர், நவ.21: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களுக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 2,643 டன் உரங்கள் காட்பாடிக்கு ரயிலில் நேற்று வந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில விசாகப்பட்டினத்திலிருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 2,643 டன் யூரியா நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இந்த உரங்கள் பிரித்து அனுப்பும் பணியை வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுபாடு) ராகினி மற்றும் டான்பெட் அதிகாரிகள் முன்னிலை லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்திற்கு 302.4 டன்னும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 297.45 டன்னும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1134 டன்னும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 126 டன்னும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 151.2 டன்னும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 252 டன்னும், விழுப்புரம் மாவட்டத்திற்கு 50.4 டன்னும், வேலூர் மாவட்டத்தில் டான்பெட் நிறுவனத்திற்கு 327.6 டன் என மொத்தம் 2,643 டன் யூரியா லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Katpadi ,Vellore ,Tiruvannamalai ,Ranipet ,
× RELATED புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர்...