- சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
- கும்மிடிப்பூண்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர் மாவட்டம்
- கலெக்டர்
- பிரதாப்
- டி.ஜே.கோவிந்தராஜன்
கும்மிடிப்பூண்டி, நவ.21: கும்மிடிப்பூண்டி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரசாயன கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் விசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு ரசாயன கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கும்மிடிப்பூண்டி பேராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொள்ளை பகுதியில் தாமரை ஏறி உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறு ரசாயன கழிவுநீர் ஆகியவை பெரிய தாமரை ஏரியில் கலந்தது. இதனால் ஏரி முழுவதும் நீர் மாசு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில் காணப்பட்டது.
இதுதொடர்பாக பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும், பெரிய தாமரை ஏரியில் மனித கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுத்தனர். இதனை அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் பேரூராட்சித்துறை அதிகாரிகள் தாமரை ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும், கும்மிடிப்பூண்டி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள மழைநீர் கால்வாய் மூலமாக ரசாயன கழிவுநீர் ஏரியில் கலப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, தாமரை ஏரிக்கு ரசாயன கழிவுநீர் செல்வதை தடுக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் மண்ணைக் கொட்டி அடைத்தனர். இதன் காரணமாக கால்வாயில் தேங்கிய ரசாயன கழிவுநீர் நிரம்பி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது. மேலும், அருகே உள்ள காற்றாலை தொழிற்சாலையின் உள்ளே ரசாயன கழிவுநீர் புகுந்தது. இதனால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், தொழிற்சாலை பணிகள் பாதிகப்பட்டது. இதையடுத்து, காற்றாலை தொழிற்சாலை நிர்வாகம் சிப்காட் திட்ட அலுவலரிடம் ரசாயன கழிவுநீர் தொழிற்சாலையில் தேங்குவதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் ரசாயன கழிவுநீர் தேங்கிய தாமரை ஏரி மற்றும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்தனர். பின்னர், சிப்காட் அதிகாரிகளை அழைத்த மாவட்ட கலெக்டர் பிரதாப், ரசாயன கழிவுநீர் வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், அந்தந்த தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத தொழிற்சாலைகளில் அதனை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, சிப்காட் தொழிற்பேட்டை அதிகாரிகள், அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமும், ரசாயன கழிவுநீரை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றக்கூடாது என்றும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும், என்று தெரிவித்தனர். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கையுடன், அபராதம் விதிக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
