×

நெல்லை மாநகர பகுதியில் பல்லாங்குழியாக மாறிய சாலைகள்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

நெல்லை: நெல்லை மாநகரில் சாலைகள் பல்லாங்குழியாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி தமிழ்நாட்டின் 6வது பெரிய மாநகராட்சி ஆகும். 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4.73 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சியின் எல்லைகள் இன்னும் விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வரும் நிலையில், மாநகர சாலைகள் தரமானதாக அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வருகின்றனர். அதேநேரத்தில் பருவ மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதான சாலைகளில் ஒட்டுப்பணிகளின் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் கடந்த 2 நாட்களில் பெய்த மழையில் பெரும்பாலான சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கே மாறி உள்ளன.குறிப்பாக நெல்லை மாநகரில் தச்சநல்லூர்- ராமையன்பட்டி விலக்கு சாலையில், மக்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்டது. பின்னர் பருவ மழைக்காக அவசர அவசரமாக சாலை ஒட்டுப்பணிகள் போடப்பட்டது. அந்த சாலை கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த மழையில் கரைந்து பல்லாங்குழி போல் மாறியது. மீண்டும் சாலை ஒட்டுப்பணி என்ற பெயரில் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு அதுவும் கரைந்து மீண்டும் பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் இதே அவலநிலையில் தான் உள்ளது.

டவுன் கோடீஸ்வரன் நகரில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள சாலைகள் அனைத்துமே மிகவும் மோகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பள்ளி வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் சென்று வரக்கூடிய கோடீஸ்வரன் நகர், முதலாவது பிரதான சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு செல்லும் சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. அந்த சாலையில் மரக்கிளைகளை நட்டு வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழைய பேட்டையில் காவல் சோதனைச்சாவடி முதல் டவுன் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளன. லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்லும் அந்த சாலை குறுகியும், குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஸ்ரீபுரம், நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் ஈரடுக்கு மேம்பாலம் அருகே சாலை பல்லாங்குழி போல் மாறி உள்ளன. வாகனங்கள் அந்த சாலையில் ஊர்ந்து செல்கின்றன. பைக்குகளில் செல்பவர்கள் வாகன நெரிசலில் உயிரைப்பணயம் வைத்துச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நயினார் குளம் மார்க்கெட் சாலையில் சாலைப் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. அதன் மேற்பரப்பு பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. கொக்கிரகுளம், நேதாஜி சாலை மற்றும் முத்தமிழ் தெரு, ஜோஸ்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு சிமென்ட் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் பயணிக்க கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வண்ணாரப்பேட்டை அணுகு சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த சாலை புனரமைக்கப்படவில்லை. நெல்லையின் இதய பகுதியான வண்ணாரப்பேட்டையையும் அதிகாரிகள் கவனிக்கவில்லை.மாநகர சாலைகளில் பயணிப்பது, ஒரு சாகசப்பயணத்திற்கு இணையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இந்தச் சாலைகளைத் தரமான முறையில் சீரமைத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே நெல்லை மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Nellai Municipal Area ,Nellai ,Nellai Municipal Corporation ,Tamil Nadu ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...