×

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

நாகை, ஜன.7: நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் (சிபிசிஎல்) என்ற பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் பணி வழங்க வலியுறுத்தியும், தொடர் பணி அளிக்க இயலாத பட்சத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதைபோல் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் ஆலை நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி ஆலை வளாக நுழைவு வாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (5ம் தேதி) நாகை கலெக்டர் அலுவலகம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். ஆனால் தீர்வு ஏற்படாத நிலையில் நேற்று (6ம் தேதி) மூன்றாவது நாளாக ஆலை வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொது செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு ஏற்படவில்லை என்றால் நாளை (7ம் தேதி) ஆலை நுழைவு வாயில் முன் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. வரும் 8ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பதிவு அலுவலகம் எதிரே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் இணைந்து தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Contract workers ,hunger strike ,
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...