×

4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா. செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது.

இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்(ஆரஞ்சு அலர்ட்), தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Kanchipuram ,Tiruvallur ,Chengalpattu ,Bay of Bengal ,Meteorological Department ,Tamil Nadu ,Chennai Meteorological Department… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...