×

ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சி ஜி.என்.செட்டி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில் 3 தளம் போட்ட கட்டிடம், ஒரு பழைய ஓடு போட்ட கட்டிடம் என 4 கட்டிடங்கள் உள்ளது. இதில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய சீமை ஓடு போட்ட கட்டிடம் பழுதடைந்ததால் இந்த கட்டிடம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், 3 கட்டிடங்களில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றும் போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதனால், பள்ளிக்குள் விஷப்பூச்சி மற்றும் பாம்புகள் வருகிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சமடைந்துள்ளனர். மேலும், சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என 3 முறை பொன்னேரி எம்எல்ஏவிடம் மனு அளித்ததாகவும், ஆனால், அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆரணியாற்றங் கரையோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஆரணியாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால், மாணவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்தி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Arani Town Panchayat ,Uthukottai ,Panchayat Union Primary School ,G.N. Chetty Street ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...