×

கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டம்; பஞ்சாபில் 10 தீவிரவாதிகள் கைது: பாகிஸ்தானின் சதி முறியடிப்பு

சண்டிகர்: லூதியானாவில் மக்கள் கூடும் இடத்தில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தி, பெரும் கலவரத்தை ஏற்படுத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆதரவுடன் கும்பல் ஒன்று திட்டமிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) கவுரவ் யாதவ் உத்தரவின் பேரில், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த சதித் திட்டத்தின் மூளையாக செயல்பட்ட  முக்த்சார் சாஹிப் பகுதியைச் சேர்ந்த குல்தீப் சிங், சேகர் சிங் மற்றும் அஜய் சிங் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீனத் தயாரிப்பு கையெறி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சதித் திட்டத்திற்கு உதவியாக செயல்பட்ட மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அம்ரிக் சிங், பர்மிந்தர், விஜய், சுக்ஜித் சிங், சுக்விந்தர் சிங், கரண்வீர் சிங் மற்றும் சஜன் குமார் ஆகியோர் பல்வேறு சிறைகளில் இருந்து இந்த விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், ‘மாநிலத்தில் அமைதியைக் குலைக்கும் நோக்கில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தும் பணியை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இவர்களுக்கு வழங்கியுள்ளனர். மலேசியாவில் பதுங்கியுள்ள அஜய், ஜாஸ் பெஹ்பால் மற்றும் பவன்தீப் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் மூலம் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Grenade attack ,Punjab ,Pakistan ,Chandigarh ,Punjab Police ,Ludhiana ,Ludhiana, Punjab ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...