- தெலுங்கானா
- திருமலை
- 8 வது வார்டு கவுன்சிலர்
- தெலுங்கானா மாநிலம்
- கரேட்டி மாவட்டம்
- சங்கர்பள்ளி மண்டலம்
- மாசனிகுடா கிராமம் ஊராட்.
- பல்லே லதா
திருமலை: தெலங்கானா மாநிலம், காரெட்டி மாவட்டம், சங்கர்பள்ளி மண்டலம், மசானிகுடா கிராம ஊராட்சியில் காலியாக இருந்த 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த பல்லே லதா(42) என்பவர் வேட்புமனுதாக்கல் செய்து, கடந்த 7ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சுயேட்சையாக போட்டியிட்ட பல்லே லதா, வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பதவிக்கு வேறு சிலர் போட்டியிட்டு இருந்த போதிலும், அவருக்கு கிராம மக்கள் இடையே பெரும் ஆதரவு இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு பிரசாரத்தில் ஈடுபட்ட பல்லே லதா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர், உடனேயே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், பல்லே லதா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட பெண் திடீரென இறந்த போதிலும் அவர் மீது கிராம மக்கள் வைத்த அன்பால் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தை அளித்தாலும், மறுபுறம் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜனநாயகத்தில் மரியாதைக்குரியதாகவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
