×

இளஞ் சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல்: சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சென்னை: இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த மார்ச் 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் பற்றி பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது. அதையும் மீறி ஆண்கள் சிலர் இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. அப்படி ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Collector ,Chennai ,Chennai District ,Collector ,Rashmi Siddharth Jagade ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...