×

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022-23 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2-ம்கட்டமாக 2023-24 கொள்முதல் பருவத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து, 4 மாவட்டங்களில் மொத்தம் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. 2024-25 கொள்முதல் பருவத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 4050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்த மாதத்திலிருந்து, விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48860 என்ற ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும். கடந்த 1ம்தேதி முதல் ஜனவரி 31ம்தேதி வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து 6000 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கொள்முதல் விலையான மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.42900 என்பதை விட இந்த ஆண்டு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.5960 கூடுதலாகும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட கேழ்வரகு விவசாயிகள் கேழ்வரகினைத் தங்கள் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Tamil Nadu ,Chennai ,Supplies ,Minister ,Ara Chakrabarni ,Dharmapuri ,Krishnagiri ,
× RELATED கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப்...