சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தை பெற தகுதியுடையவராவர். இந்த விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும்.
இந்த பதக்கம் முதல்வரால் 26.1.2026 குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2026ம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். அதில், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 15. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.
